முல்லைத்தீவு, அளம்பிலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
செம்மலையைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தை என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டுக்குச் சென்ற இருவர், இவரை வீட்டுக்கு வெளியே அழைத்துத் தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகின்றது.
தலையில் படுகாயமடைந்த இவர் நிலத்தில் வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
நீதிவான் முன்னிலையில் உடல் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் உயிரிழந்தவரின் தந்தை மட்டுமே இருந்தார் என்றும், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தனர்.
Discussion about this post