வவுனியா குருமன் காடு பிள்ளையார் ஆலய திருவிழாவின் போது சிலரினால் அமைக்கப்பட்டிருந்த தாக சாந்தி நிலையத்தில் காணப்பட்ட பாதாதை ஒன்று பலரை வேதனை கொள்ள வைத்துள்ளது.
அந்த பதாதையில், “இந்து பெளத்த சங்கம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான பெயர்களில், இவ்வாறான பதாதைகளுடன் தாக சாந்தி நிலையங்களை அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது, ஆலய நிர்வாகத்தில் தமிழர்கள் இருக்கின்றனரா என பலர் தமது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
தமிழ் மண்ணை நேசிக்கும் தமிழ் உணர்வாளர்கள் நிச்சயம் இப்படி செய்ய மாட்டார்கள் எனப் பலரும் தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களை ஊடாக தெரிவித்து வருகின்றனர்.
அங்காங்கே தமிழர் தாயகம் முழுவதும் திடீர் புத்தர் சிலைகள் முளைத்துவரும் சூழ்நிலையில், அதனை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தமிழர்களின் சமய ரீதியிலான நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களில் இப்படியான பெனர்கள் வைக்கப்படுகின்றமை மிகுந்த கவலையை தருவதாக ஆலயத்தின் பக்தர்கள் கூறுகின்றனர்.
சிங்கள குடியேற்றங்களை தமிழர்களின் நிர்வாக எல்லையுடன் இணைப்பதற்கான முயற்சிகள் பல இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதுவும் வவுனியாவில் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இப்படியான செயல்கள் நடைபெறுவது சிங்கள – பெளத்த மயமாக்கலை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும்.
தொடர்ச்சியாக இப்படியான செயல்கள் நடக்குமாயின், வருங்காலங்களில் தனித்தனியாக தமிழர் நிலங்களில் குடியேறியேறிய புத்தர், எமது ஆலயங்களிற்குள் நுழைந்து எமது கடவுள்களின் அருகில் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
வெடுக்குநாறி மலை மற்றும் குருந்தூர் மலை போன்று வருங்காலங்களில் எமது வழிபாட்டிடங்கள் மேலும் பெளத்த சக்திகளால் பறி போகலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post