மன்னார், பூநகரியில் இந்தியா அதானி குழுவால் நிர்மாணிக்கப்படவுள்ள 500 மெகாவொட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக இந்திய பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்தார் என்று முன்னாள் மின்சார சபையின் தலைவர் கோப் விசாரணையில் தெரிவித்த அறிக்கை இரு நாடுகளிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தப் பின்னணியில் இலங்கையின் அண்மைய நம்பிக்கை மீறல் காரணமாக, இலங்கைக்கு அடுத்த 500 மில்லியன் டொலர் எரிபொருள் கடன் வரிக் கடனை வழங்க இந்தியா தயங்குகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கிய நிலையில் கடன் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த வாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கையில் சில குழுக்கள் இந்தியாவுக்கு எதிரான உணர்வை உருவாக்கி வருகின்றன என்றும், அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடவில்லை என்றும் இந்தியா கருதுகின்றது. கொழும்பில் அதானி குழுமத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் இரு தரப்பு உறவைப் பாதித்துள்ளது என்று தெரியவருகின்றது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், இந்தியக் கடன் உதவிகள் மூலமே நிலைமையைச் சமாளித்து வருகின்றது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post