இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெங்காயத்தின் விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு
இந்த நிலையில், குறித்த விடயம் தற்போது இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் உள்நாட்டுச் சந்தையில் வெங்காய கையிருப்பை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்திருந்தது.
வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை
எனினும், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு குறித்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்திருந்தது.
இதற்கமைய, ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் வெங்காயத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post