மாலைதீவில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாலைதீவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளமை இந்தியாவுக்கு பாதகமாக வந்துள்ளது.
மாலைதீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றிபெற்றமை நிச்சயமாகவே சீனாவை மகிழ்சிப்படுத்தியிருக்கும்.
ஏனெனில் இந்தியாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என்ற பரப்புரைகளை முன்வைத்த முகமது முய்சு 54 சதவிகித வாக்குகளுடன் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் தோல்வியடைந்த இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலைதீவின் உறவுகள் வலுப்பெற்ற நிலையில் இனி காட்சிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த இப்ராஹிம் முகமது சோலி தனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
அவரது ஆட்சிக்காலத்தில் மாலைதீவில் தனது இருப்பைத்தக்க வைத்த இந்தியா அதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது கண்காணிப்பையும் விரிவாக்கியிருந்தது. இதற்காக 75 இந்திய ராணுவ அதிகாரிகள் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வரும் சீனா, மாலைதீவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஆதரவாளரான முகமது முய்சு வெற்றிபெற்றுள்ளார்.
பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை போலவே மாலைதீவிலும் தனது கடற்படையை நிறுத்த சீனா முயல்கிறது. இந்த முயற்சியில் அதற்கு வெற்றி கிட்டினால் இந்தியப் பெருங்கடலில் அதற்கு இரண்டாவது தளம் கிட்டிவிடும் என்பதில் ஐயம் இல்லை.
இலங்கையை போல சீனாவிடம் இருந்து மாலைதீவு பெருமளவு கடனை பெற்றுள்ளது. தலைநகர் மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் பாலம் சீன முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் தெற்காசியாவில் சீனாவில் ஆதிக்கம் தீவிரமாக அதிகரித்து வருவது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post