யாழ்ப்பாணம் வலயத்துக்கு உட்பட்ட இடைநிலைப் பிரிவு பாடசாலைகளுக்கான சுகாதாரமும், மேம்பாடும் தொடர்பான செயலமர்வு வெகுவிரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது என்று யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளர் நாயகம் முத்துகுமாரு இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக வடக்கு மாகாண ரீதியாக சுகாதாரமும் மேம்பாடும் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் மாணவர்களின் தனிநபர் சுகாதாரம் , போதைப்பொருள் விழிப்புணர்வு என்பவை தொடர்பான செயலமர்வுகள் ஊடாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட 6 முதல் 13ஆம் தரத்தில் கல்வி கற்கும் 27 ஆயிரத்து 490 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக வலயத்துக்குட்பட்ட 104 பாடசாலைகளிலிருந்து 104 சுகாதார மேம்பாடு தொடர்பான ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு உளவியல் சார் மருத்துவ நிபுணர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து செயலமர்வு தொடர்பான விழிப்பூட்டும் முகமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆசிரியர்களே வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் சுகாதாரமும் மேம்பாடும் தெடர்பான செயற்றிட்டத்தை மேற்கொள்வதற்கான அடையாளப்படுத்தல்களை மேற்கொள்வர் என்றார்.
Discussion about this post