இடைக்கால அரசு அமைப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். இடைக்கால அரசு அமைக்கப்படுமாக இருந்தால், ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி பறிபோகும் நிலைமை ஏற்பட்டும்.
சில நாள்களுக்கு முன்னர், அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மூன்று பிரதான மகா நாயக்க தேரர்கள் வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாய ராஜபக்சவுக்குக் கடிதம் அனுப்பியிருந்தனர்.
அதற்குப் பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, இடைக்கால அரசு அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்க வேண்டும் என்று ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க முயன்றமையே இதற்குக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த ராஜபக்ச மறுத்து வரும் நிலையில், அவரது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவே பிரதமராகத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் தேவையாகவுள்ள நிலையில் நேற்று மாலைவரையில் 50 பேரின் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன என்று அறியமுடிந்தது.
அவ்வாறு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களைச் சேகரிக்க முடியாவிட்டால், மஹிந்த பதவி விலக நேரிடும்.
ஜனாதிபதியும், பிரதமரும் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளால் ராஜபக்ச குடும்பத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன.
இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post