நாட்டில் அவசரமாக நிரப்ப வேண்டிய ஆசிரிய வெற்றிடங்களுக்கு ஒன்பது மாகாணங்களிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
இதேவேளை பரீட்சைகளில் தோற்றி புள்ளிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு புள்ளிகளின் அடிப்படையில், நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.“
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, நேற்று (07) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஆசிரியர் நியமனம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்,
”மாகாண ஆளுநர்களுடன் நேற்று முன்தினம் காலையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.
அத்துடன் நேற்று காலை சகல மாகாணங்களிலுமுள்ள கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மேலும் விரைவாக மேற்கொள்ள வேண்டிய ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தெரிவானவர்கள் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவர்.” எனத் தெரிவித்தார்.
ஜயந்த சமரவீர கேள்வி
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தமது கேள்வியின் போது தெரிவித்தாவது,
”மேல் மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பரீட்சை நடத்தப்பட்டது. அதனையடுத்து நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டது. சமகாலத்தில் செயன்முறை பரீட்சையும் நடத்தப்பட்டது.
5350 பேர் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 2500 பேருக்கு மட்டுமே இதுவரை நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மேல் மாகாணத்தில் 5305 ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
பாடசாலைகளில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், மீதமானவர்களுக்கு எப்போது நியமனம் வழங்கப்படும் என்பதை கல்வியமைச்சர் சபையில் வெளிப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் நியமனங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post