இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அரச பணியாளர்களுக்கு அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைத் தவிர ஏனையோர் நாளை பணிக்கு வரத்தேவையில்லை என்று கூறினார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, இதனால் எரிபொருளை மீதப்படுத்த முடியும் என்று கூறினார்.
ஜூன் மாத நடுப்பகுதி வரைக்கும் தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புக்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்த அவர், அவற்றை சீரான முறையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பெற்றோல் மற்றும் டீசல் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்கள் வரிசைகளில் நிற்க வேண்டியிராது என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், நாளை பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றது. பாடசாலை மீண்டும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post