கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், அரச நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி விடுத்துள்ள சுற்றறிக்கையில், அரச நிறுவனங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துப் பல பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ வாகனங்கள் வைத்திருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்குத் தற்போது வழங்கப்படுவதற்கு மேலதிகமான எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கான வெளிமாவட்ட அதிகாரிகளைக் கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்தவும், அத்தகைய அழைப்பு நாள்களில் முழு நாளையும் கூட்டங்களுக்குப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய கடமைகளுக்காக வெளிமாவட்ட உத்தியோகத்தர்கள் கொழும்புக்கு வருவது அவசியமானால் ஒரே வாகனத்தில் குழுவாக வரவழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையான நேரத்தில் வளிச் சீராக்கிகளை (எயார் கண்டிஷ்ன்ஸ்) நிறுத்த வேண்டும் என்றும், முடிந்தவரை வளிச் சீராக்கிப் பாவனையைக் குறைத்து, மின் விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லிப்ட் பாவனையை முடிந்தவரை குறைக்கவும், தேவையற்ற விளக்குகளை அணைக்கவும் பணிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட அலுவலக நேரத்துக்குப் பின்னர் அலுவலகங்களை மூடவும் பணிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post