அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளப் பெறுமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ள போதிலும் அந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையின் விசேட கூட்டத்தில் தற்போது வழங்கப்படும் 2500 ரூபாவுக்கு மேலதிகமாக இடைக்கால கொடுப்பனவாக 5500 ரூபாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரச ஊதிய முரண்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிசீலனையைத் தொடர்ந்து இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேர்தல் காலம்
இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை கொடுப்பனவு வழங்க வேண்டாம் என நேற்று (07) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்த தேர்தல் காலத்தில் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணையத் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayake) இதற்கு முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு (Saman Ekanayake) கடிதம் மூலம் அறிவித்துள்ளார்
எனினும், அந்த வேலைத்திட்டங்கள் சட்டவிரோதமானவை அல்ல என்பதால், அவற்றை நிறுத்துமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்தும் நிலையில் இல்லை என சமன் ஏக்கநாயக்க, தேர்தல் ஆணையத் தவிசாளரின் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார்.
சுற்றறிக்கை
இதன் படி, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் நேற்று அனைத்து அமைச்சு அதிகாரிகளையும் வரவழைத்து அறிவித்துள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன (Pradeep Yasaratna), அமைச்சரவையின் முடிவின் படி கொடுப்பனவை வழங்குமாறு இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (07) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
Discussion about this post