பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பிரதிசபாநாயகர் பதவிக்குத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்பில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் வாக்களித்த மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று நாட்டு மக்கள் வலியுறுத்திப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்ற நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த 11 கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டன.
அதையடுத்து பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் தனது பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
நேற்று நடைபெற்ற புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அரசாங்கத்தில் இருந்து விலகிய பங்காளிக் கட்சிகளின் சார்பாக – நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் சார்பாக அவர் நிறுத்தப்பட்டார்.
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பெரமுனக் கட்சி தமது சார்பில் வேட்பாளரை நிறுத்தாது, ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு ஆதரவளித்தது.
ஸ்ரீலங்கா பெரமுன சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு அவர் தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கத்தின் இருப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே, சியம்பலாப்பிட்டியவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை பெரமுன எடுத்திருந்தது.
அரசாங்கத்துக்கு ஏற்படவிருந்த நெருக்கடி லாவகமாக இல்லாமலாக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்தில் இருந்து விலகியதாகக் கூறிக்கொள்ளும் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்துக்கு மறைமுக ஆதரவைக் கொடுத்து வருகின்றன என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்கள் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காது பதவிகளுக்காக இரகசிய நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றனர் என்று பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
Discussion about this post