அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் இதுவரை கிடைக்காமை தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர் என்று அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் 18 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளுக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 12 பேரின் பெயர்கள் பல வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை அவர்களுககுப் பதவிகள் வழங்கப்படவில்லை. அதனால் பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுஜன பெரமுன 12 பேரின் பெயர்களை அனுப்பி இருந்தாலும் ஏனைய கட்சிகளுக்கும் சில அமைச்சு பொறுப்புகளை வழங்க வேண்டியுள்ளதால், பொதுஜன பெரமுனவுக்கான அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆகக் குறைப்பட வாய்ப்புள்ளது.
ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஏ.எல்.எம் அதாவுல்லா, ஜீவன் தொண்டமான், வஜிர அபேவர்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன என்று தெரிய வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் பயணத்தின் பின்னர் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post