அமைச்சுக்களின் செயற்பாடுகளை வினைத் திறனுள்ளதாக மாற்றுவதற்கு குறித்தொதுக்கப்படும் நிறுவனங்கள் ஆகக் குறைந்தது பத்து வருடங்களுக்காவது அதே அமைச்சின் கீழ் செயற்பட வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கொழும்பில் அவரது அமைச்சில் இன்று நடத்திய விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
அதிகமான அமைச்சுக்கள் திறைசேரியின் உதவியையே நம்பியுள்ளன. இந்நிலைமைகள் மாற்றப்பட்டு சொந்த முயற்சியில் உழைக்கும் நிலைமைகள் ஏற்படுவது அவசியம்.
இதற்கு, ஆகக்குறைந்தது பத்து வருடங்களுக்காவது ஒரே அமைச்சினகீழ் குறித்தொதுக்கப்படும் இலாகாக்கள் இருக்க வேண்டும். இவ்வாறு நிலையாக எந்த இலாகாக்களும் ஒரே அமைச்சி்ன்கீழ் இருப்பதில்லை.
அமைச்சுக்கள் மாற்றப்படும்போது அங்குள்ள நிறுவனங்களும் மாற்றப்படுகின்றன. சிலர், தங்களது தேவைகளுக்காக இவ்வாறு நிறுவனங்களை தமது அமைச்சி்ன் கீழ் தருமாறு கோருகின்றனர்.
அமைச்சுக்கள் அதிகரிக்கப்படுகின்ற போதும் இதே நிலையே ஏற்படுகிறது. ஏதாவதொரு இலாகாவை (நிறுவனம்) வழங்கியே ஆக வேண்டும் என்பதற்காகவும், இவ்வாறு இங்கிருப்பது அங்கும், அந்த அமைச்சிலிருக்கும் நிறுவனம் இங்கும் கொண்டு வரப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுற்றாடல்துறை அமைச்சு இருந்தபோது, இருபது இலாகாக்கள் இருந்தன.இப்போது, இரண்டு நிறுவனங்களே எனது அமைச்சின்கீழ் உள்ளன.
இவ்வாறு செய்வதால்,அமைச்சின் செயற்பாடுகளை வினைத்திறனுள்ளதாக மாற்ற முடியாது. சம்பந்தமுள்ள அல்லது அமைச்சுக்குப் பொருத்தமான நிறுவனங்கள்தான் ஒரு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும்.
நாட்டின் கனிம வளங்கள் உள்ள சகல பகுதிகளையும் சுற்றாடல் அமைச்சு அடையாளம் கண்டு வைத்துள்ளது. தேவையான முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.
நில அகழ்வுகளில் ஈடுபடுவதற்காக 64 முதலீட்டாளர்கள் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், இவர்களில், 47 பேர் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் அனுமதிப்பத்திரங்களை வேறு விதமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் அனுமதி ரத்துச்செய்யப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டில்,ஒரு பில்லியன் டொலர் எமது அமைச்சின் கீழான நிறுவனங்களின் செயற்பாடுகளில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இதைக் கருத்திற்கொண்டுதான் அமைச்சின் கீழுள்ள இலாகாக்களின் அதிகாரிகளுடன் மாதாந்தம் சந்திப்புக்களை நடத்தவுள்ளேன் என்று அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
Discussion about this post