இலங்கை அமைச்சரவையில் விரைவில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும், கைத்தொழில் அமைச்சராக தினேஸ் குணவர்த்தனவும், கல்வி அமைச்சராக எஸ்.பி.திசாநாக்கவும் பதவியேற்கவுள்ளனர் என்று அறிய முடிகின்றது.
தற்போது எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பிலவும், கைத்தொழில் அமைச்சராக விமல் வீரவன்சவும், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்த்தனவும் பதவி வகிக்கின்றனர்.
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர் உதய கம்மன்பில பகிரங்கமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து வருகின்றார். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டுகின்றார். மற்றொரு அமைச்சரான விமல் வீரவன்சவும் அரசாங்கத்தை விமர்சித்து கருத்துத் தெரிவித்து வருகின்றார்.
இந்தநிலையில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று அறிய முடிகின்றது. எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்று கூறப்படும் பவித்ரா வன்னியாராச்சி முன்னர் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
கொரோனாத் தொற்றுத் தீவிரமடைந்திருந்தபோது, இவர் கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்காக நதியில் புனித நீர்க் குடங்களை இட்டு வழிபாடுகள் மேற்கொண்டிருந்தமை விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. கொரோனாத் தொற்றுக் காலத்தில் சுகாதார அமைச்சராக இவர் மேற்கொண்ட செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அதன்பின்னர் சுகாதார அமைச்சு ஹெகெலிய ரம்புக்வலவுக்கு வழங்கப்பட்டு, போக்குவரத்து அமைச்சு பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்டிருந்தது.
Discussion about this post