தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் சுமார் இரண்டாயிரம் பென்குயின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
கடந்த பத்து நாட்களிலேயே இவ்வாறு இரண்டாயிரம் பென்குயின்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை மெகலானிக் பென்குயின்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அட்லாண்டிக் கடலில் உயிரிழந்து, பின்னர் உருகுவே கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பென்குயின்கள் உயிரிழக்க காரணம் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை மேற்கொண்ட ஆய்வில் கரை ஒதுங்கிய பென்குயின்களுக்கு இன்புலுயென்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்து கரை ஒதுங்கிய பென்குயின்கள் அனைத்தும் இளம் வயதுடையவை என்றும், அவற்றின் வயிற்றில் உணவு பொருட்கள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே உணவு பற்றாக்குறை காரணமாக பென்குயின்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பாக அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post