“தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என நாம் சொல்லி இருப்போம். இல்லையேல் யாரேனும் சொல்லிக் கேட்டு இருப்போம்..
ஆனால் …
அப்படி தன் உயிருக்கு மேலாக போற்றிய அன்னைத் தமிழுக்கு ஒரு சோதனை வந்த பொழுது தன் உயிர் சுமக்க முடியாமல் தன்னையும் அறியாமல் உயிர் பிரிந்த தமிழறிஞர் கலாநிதி தாவீது அடிகள் என அழைக்கப்படும் வண. சிங்கராயர் தாவீது அவர்களிற்கு நினைவு வணக்கம்.
டேவிட் அடிகள் என்ற பெயரைத் தமிழில் தாவீது என மாற்றிக்கொண்ட இவர் யூன் 28, 1907 ம் ஆண்டு பிறந்தார்.
யூன்1 அதிகாலை யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சோகம் தாளாமல் அன்று இரவு படுக்கைக்குச் சென்றவர்
யூன் 2, 1981 அன்று மீண்டும் எழும்பாமல் மண்ணை விட்டு மறைந்தார்.
தாவீது அடிகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர். பன்மொழி வித்தகர். தமிழ் மீது பெரும் காதல் கொண்டவர்.
யாழ்ப்பாணம் தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவீது அடிகள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைக் கற்று பின்னர் லண்டன் மெட்ரிக்குலேஷன் சோதனையில் சித்தி அடைந்து அதன் பின் இலண்டன் பல்கலைக்கழக இளங்கலைமாணிப் பரீட்சையில் தோற்றி சிறப்புத் தரத்தில் சித்தியடைந்தார்.
தன் தந்தையார் படிப்பித்த யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிலேயே 1936 தொடக்கம் 1967 வரை ஆசிரியராகப் பணியாற்றினார்.
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் உந்துதலால் சமஸ்கிருத மொழியைக் கற்று புலமை அடைந்து அதில் முதுகலைமாணிப் பட்டத்தினை இலண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கீழைத்தேசத்தில் முக்கியமாக வாழும் மொழிகளையும் மேலைத்தேசத்தில் முக்கிய வாழும் மொழிகளையும் கற்கத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியை மையமாக வைத்து மற்றைய மொழிகளோடு ஒப்பீடு ஆய்வு செய்து, சுவாமி ஞானப்பிரகாசர் ஆரம்பித்து வைத்த ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளைப் பின்பற்றி தானும் ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 ஆம் ஆண்டு தொடக்கம் பல பாகங்களாக வெளியிட்டுள்ளார்.
அவற்றை விடத் தனி நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று “We stand for…’ என்பதாகும்.
ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் தன் வாழ்க்கையில் இறுதிக் காலத்தில் தான் கற்பித்த பத்திரியார் கல்லூரியிலேயே மேல்மாடியில் ஓர் அறையில் தங்கி இருந்தார்.
நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேட்ட அதிர்ச்சியினாலேயே அடிகளார் உயிர் நீத்தார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ் நூலகம் எரிப்பு என்பது அழியாத நெருப்பு!
இந்த தீ நினைவுகளைச் சந்ததி கடந்தும் தமிழினம் ஏந்தி நிற்கும்.
அந்த வலிகளை நினைக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் யாழ் நூலக எரியூட்டலின் வேதனை தாங்காமல் உயிர் நீத்த தாவீது அடிகளின் நினைவுகளும் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
Discussion about this post