அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில், எதிரணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிரணி பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன், அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பல்வேறு தரப்பினரும் தங்களது ஆலோசனைகளை முன்வைத்தனர் என்று தெரிவித்தார்.
அனைத்து விடயங்களையும் ஒன்றிணைத்து, ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்லவை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவர் பிரதமராக வந்தாலும் பிரச்சினை இல்லை. முழுமையான தேசிய ஒருமைப்பாட்டுடனான வேலைத்திட்டத்துக்கு, முதலில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், தற்போதைய அரசாங்கத்துக்கு இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய இயலுமை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post