எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தியுள்ள அமைச்சரவைப் இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன, இது மனித உரிமைப் பிரச்சினை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான முழுமையான சுதந்திரத்தை ஜனாதிபதி மக்களுக்கு வழங்கியுள்ளார். அவற்றுக்கு நாம் ஒருபோதும் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை.
ஜனநாயக நாடு என்ற ரீதியில் நாம் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அதேநேரம், சில அரச நிறுவனங்களை பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புப் பிரிவுக்கு காணப்படுகின்றது. அவர்கள் அதன்படியே செயற்படுகின்றனர்.
அவர்கள் ஒருபோதும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதில்லை. அது தொடர்பாகத் தெளிவான ஆலோசனைகளை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் சில குழுக்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தி ,அதனூடாக தனி நபர்களுக்கு அல்லது குழுக்களுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தி அரசியல் இலாபத்தை தேடுவதே அவர்களின் தேவையாக உள்ளது.
சில ஆர்ப்பட்டங்களின்போது, பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். இவை அனைத்தையும் அவர்கள் பொறுமையாக கையாண்டனர். இதற்காக பொலிஸர் மற்றும் இராணுவத்தினருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இதேவேளை, கடந்த இரண்டு நாள்களாக நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலையை நாம் அறிகின்றோம். ஆனால் நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு காணப்பட்டது. தற்போதும் காணப்படுகின்றது. இருப்பினும் கடந்த சில நாள்கள் பெட்ரோல் விநியோகிக்கும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
அத்துடன், பெட்ரோல் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளும் காணப்படுகின்றன. நாட்டில் டீசல் தட்டுப்பாடு காணப்பட்டபோதிலும், பெற்றோல் தட்டுப்பாடு இருக்கவில்லை என்றும், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சிலர் திட்டமிட்டே பெற்றோலை விநியோகிக்காது பதுக்கி வைத்துள்ளார்கள் என்பது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்துள்ளன. எனவே பெற்றோல் விநியோகம் தொடர்பாக கண்காணிப்பதற்கும், முறையான விநியோக பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்குமான உதவியை பெறுவதற்பாக பாதுகாப்புப் பிரிவை நாடவேண்டியுள்ளது.
இது பொது மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்படுவதே தவிர, மனித உரிமைகளை மீறுவதற்காக அல்ல என்றார்.
Discussion about this post