அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்திருந்த தனிநபர் மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.
அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றிய போது, அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக போதுமான காரணங்களை முறைப்பாட்டாளர் முன்வைக்கத் தவறியுள்ளதாக, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றிய போது, சர்வதேச திறைசேரி முறிகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியமை, இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவதாகத் தெரிவித்து அமெரிக்க புலனாய்வாளரான இமாட் சுபேரி என்பவருக்கு அமைச்சரவை அனுமதி இன்றி பணம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இந்த தனிநபர் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
Discussion about this post