மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு
உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து
அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு
விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள
அவசரகால நிலை தொடர்பாக இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாடு இன்று எமது ஒரு மௌனமான
வன்முறைக்கு மோசமாக முகங்கொடுத்துள்ளது. மௌனமாகவே வருகின்ற நோயால்
மௌனமாகவே மக்கள் உயிரிழந்து போகின்ற நிலை காணப்படுகின்றது.
இதனால் இறந்த உடலங்களை தூக்கிச் செல்வதற்கு கூட ஒருவரும் முன்வராத
சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய நிலையில் குறித்த அனர்த்தத்தை
கட்டுப்படுத்த நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி
வருகின்றனர்.
மறுபுறம் முடக்கப்படுவதால் நாடு பாரிய பொருளாதாரத்தை இழக்கும் நிலை
காணப்படுகின்றது என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த
இரண்டிற்கும் நடுவில் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக அல்லலுறும் நிலை
நீடித்து வருகின்றது.
இந்த இரண்டு பக்க அடியிலிருந்து மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் பல்வேறு
நலத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
இந்நிலையில் எதிர்க் கட்சியினர் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து
வருகின்றனர். ஆனால் மனித குலத்தை பலியெடுத்துவரும் இந்த கொரோனா
பெருந்தொற்றை இல்லாதொழிக்க உலக நாடுகள் தமக்கிடையே இருந்த அரசியல்
பேதங்ளை மறந்து ஒன்றுபட்டு உறுதிகொண்டுள்ளனர்.
அதுபோல இலங்கைத் தீவிலும் அனைத்து தரப்பினரும்தத்தமது சுயநலன்களிலிருந்து
விடுபட்டு ஒன்றுபட்டு எமது நாட்டிலிருந்து இந்த பெருந்தொற்றை
இல்லாதொழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன் என அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Discussion about this post