யாழ்ப்பாணம், குருநகரில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குச் சென்ற இரு இளைஞர்கள், இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரையும் புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று தமிழகத்தின் ராமநாதபுரம், தொண்டி கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இரு இளைஞரு்கள் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள், தாங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பொருளாதார நெருக்கடியால் தஞ்சம் கோரி வந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆயினும் அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தனர். அவர்களின் ஒளிப்படங்கள் இலங்கைக்கு அனுப்பி விசாரித்தபோது, அவர்களிள் இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து அவர்கள் இருவரும் சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து பலர் தமிழகத்துக்கு குடும்பம் குடும்பமாக தஞ்சம் கோரிச் செல்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களும் இந்த நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
Discussion about this post