லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் மஹிந்த
யாப்பா அபேவர்தனவை நாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுப் பிரதிநிதிகள் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சபாநாயகரின்
தலையீட்டை நாடப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா
தலைமையில் குழு நேற்று (வெள்ளிக்கிழமை) கூடியபோது, இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்தவின் சிறைச்சாலை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக
விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த சம்பவம் கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக
இருப்பதாகவும் இது மனித உரிமைகளை மீறுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு
குறிப்பிட்டது.
அத்தோடு இந்தச் சம்பவம் சட்டம் ஒழுங்குக்கு சவாலாக இருப்பதாகவும்
பொதுமக்கள் தங்கள் பிரதிநிதிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
சேதப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு
சுட்டிக்காட்டியது.
சிறைச்சாலை அச்சுறுத்தல் சம்பவம் மக்களிடையே ஜனநாயகம் மற்றும்
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ள
நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரை வலியறுத்த
தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Discussion about this post