இலங்கையை அதிர வைத்த சிறுமி பாத்திமா ஆயிஷா கொலைச் சம்பவத்தில் 29 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாணந்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை 2 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றும் அனுமதித்துள்ளது.
தற்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளபோதும், பிரதேச வாசிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் சிறுமி ஆயிஷாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்று பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
தவறான நோக்கத்துடன் ஆயிஷாவைக் கடத்திச் சென்றதாகவும், பின்னர் அச்சம் காரணமாக சிறுமியை எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ள சந்தேகநபர், ஆயிஷா குடும்பத்தினரிடம் இது தொடர்பாகக் கூறி விடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்தேன் என்று குற்றத்தைக் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
சிறுமியின் உடல் உடல் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆயினும் சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. சிறுமி சேற்றுக்குள் அமிழ்த்தப்பட்டால், சேறும் நீரும் உட்சென்று மரணம் சம்பவித்திருக்கின்றது.
கைது செய்யப்பட்டவர் ஆயிஷாவின் தந்தையின் நண்பர் என்பதுடன், ஆயிஷாவின் தந்தையும், சந்தேகநபரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். சந்தேகநபர் ஆயிஷாவின் தந்தையை சந்திப்பதற்கு அடிக்கடி வீட்டுக்கு வருபவர் என்றும் கூறப்படுகின்றது.
சிறுமி காணாமல் போனதையடுத்து கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, சந்தேகநபரும் சேர்ந்து சிறுமியைத் தேடியமையும் தற்போது தெரியவந்திருக்கின்றது.
கடந்த 27ஆம் திகதி 9 வயதுச் சிறுமி ஆயிஷா வீட்டுக்குப் பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்று திரும்பியபோதே கடத்தப்பட்டிருந்தார். சிறுமி கோழி இறைச்சி வாங்கச் சென்றார் என்றும் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் குடும்பத்தினர் பொலிஸ் முறைப்பாட்டில் கூறியிருந்தனர் என்று தகவல் வெளியாகியிருந்தது.
அன்றைய தினம் ஆயிஷாவின் வீட்டில் கோழி இறைச்சி சமைக்கப்பட்டிருந்தது என்று பிரதேச வாசிகள கூறுகின்றனர். கோழி இறைச்சி வாங்கச் சென்ற ஆயிஷா வீடு திரும்பாத நிலையில், கோழி இறைச்சி சமைக்கப்பட்டிருந்தமை பிரதேச வாசிகள் மத்தியில் கருத்துக்கள் உலாவுகின்றன.
அதேநேரம், ஆயிஷா முற்பகலில் காணாமல் போயிருந்த நிலையில், அவரது தாயார் பிற்பகல் 2 மணிக்குப் பின்னரே தாய் பொலிஸ் முறைப்பாடு செய்தார் என்று அயலவர்கள் கூறுகின்றனர். எதையாவது மறைப்பதற்காகச் சிறுமி அநியாயமாகக் கொலை செய்யப்பட்டரா என்ற கேள்வியும் பிரதேச மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அந்தப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடக்கின்றது என்றும், அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் வலியுறுத்துகின்றனர்.
கொலையாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறியுள்ள பொலிஸார், விசாரணைகள் தொடர்கின்றன என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும் இவ்வாறான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. உண்மையான குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுவதுடன், இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
Discussion about this post