ஒண்டாரியோவில், பெரும்பரவல் தீவிரம் பெற்ற முதல் ஒரு வருடத்தில், ஏறத்தாழ 600,000 பேர் உணவு வங்கிகளுக்கு சென்றுள்ளதாக, பட்டினி ஒழிப்பு அமைப்பான Feed Ontarioவின் வருடாந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இவர்கள், மொத்தம் 3.6 மில்லியன் தடவைகளுக்கு மேல், உணவு வங்கிகளின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ள Feed Ontario, இது ஒரு அபாயகரமான நிலை என சுட்டிக்காட்டியுள்ளது. அடிப்படை உணவினை பெற்றுக்கொள்வதற்கு உதவி தேவைப்படுவோரின் தொகை, பெரும்பரவலுக்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் உயர்வடைந்துள்ளது. இது, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர், ஒரே வருடத்தில் எதிர்கொள்ளப்பட்டுள்ள, மிக அதிகமான உயர்வு ஆகும். ஒண்டாரியோவிலுள்ள 136 உணவு வங்கிகள், 1100 சமூக உதவி அமைப்புக்கள் ஆகியவற்றின் தரவுகளின் படி, இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒண்டாரியோவின் சமூக நல கொடுப்பனவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஆதரவு திட்டம் ஆகியவற்றின் பரந்துபட்ட தன்மை போதாது என தெரிவித்துள்ள Feed Ontario அமைப்பு, அத்திட்டங்களில் தங்கியிருப்போரே, உணவு வங்கிகளை நாடியுள்ளோரில் 59 சதவீதமானவர்கள் என கூறியுள்ளது.
Discussion about this post