வடமாகாணக் கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவோருக்கு எரிவாயு விநியோகிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றுப் புதன்கிழமை வட மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் உள்ள வடக்குமாகாண கல்வித் திணைக்களத்தில் வைத்து எரிவாயு சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அறிவுறுத்தலுக்கு அமைய ஊழியர்கள் தங்கள் வெற்று எரிவாயு சிலிண்டர்களை திணைக்களத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு முறைப்பாடு ஒன்று பதிவாகியிருந்தது.
முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் திணைக்களத்துக்கு நேரில் சென்று எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைத் தடுத்து நிறுத்தினர்.
நாட்டில் தற்போது எரிவாயு சிலிண்டருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டரைப் பெறுவதற்காக அதிகாலை முதல் இரவு வரையில் மக்கள் முகவர் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.
ஆயினும் எரிவாயு சிலிண்டர்கள் முகவர் நிலையங்களுக்கு கொண்டுவரப்படாது இடைநடுவில் கைமாற்றப்படுகின்றது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரச திணைக்களங்களில் எரிவாயு விநியோகம் நடைபெறுகின்றது என்று தகவல்கள் முன்னர் வெளியான நிலையில், அவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசன் கோரியிருந்தார்.
ஆயினும் வடக்கு மாகாணத்தில் தற்போதும் பல திணைக்களங்களில் ஊழியர்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post