உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளின் முக்கிய கட்டளைத் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
ரஷ்யாவின் ஏழாவது வான்வழித் தரையிறக்கப் பிரிவின் கட்டளைத் தளபதியும் மத்திய இராணுவ மாவட்டத்தின் கூட்டு ஆயுதப் படைகளது உப தளபதியுமாகிய 47 வயதுடைய மேஜர் ஜெனரல் ஆன்ட்ரே சுகோவெட்ஸ்கி (Major General Andrey Sukhovetsky) வான்வழித் தரையிறக்க முயற்சி ஒன்றின் போது சினைப்பர் சூட்டுக்கு இலக்கானார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
தலைநகர் கீவுக்கு வட கிழக்கே Hostomel நகரில் நடத்தப்பட்ட தரையிறக்கத் தாக்குதலிலேயே தளபதி சிக்குண்டார் என்று உக்ரைன் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் போரில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் என்று ரஷ்யா அறிவித்த 498 படையினரில் அதி உயர் தர நிலையில் உள்ளவர் சுகோவெட்ஸ்கியே ஆவர்.
ஆனால் சுமார் 9அயிரம் ரஷ்யப்படையினரைத் தாங்கள் கொன்றுவிட்டதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. மேஜர் ஜெனரலின் மரணத்தை ரஷ்யா முறைப்படி அறிவிக்கவில்லை. அவரது சக படைவீரர்கள் அந்தச் செய்தியை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அவர் எங்கே எவ்வாறு உயிரிழந்தார் என்பதும் சுயாதீன செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இராணுவத்தின் வான்வழித் தரையிறக்கக் குழுக்களின் சண்டைகளில் பல சாதனைகளைப் புரிந்தவர் சுகோவெட்ஸ்கி. 2014 இல் கிரிமியா ஆக்கிரமிப்புப் போரிலும் முக்கிய பங்குவகித்தவர்.
அவரது மரணம் உக்ரைன் போரில் ரஷ்யப்படைகள் சந்தித்த குறிப்பிடத்தக்க பின்னடைவு என்று கூறப்படுகிறது.
இதேவேளை, உக்ரைனுக்கு மேலே வான் பறப்புத் தடை வலயம் (no-fly zone)ஒன்றை அறிவிக்குமாறு உக்ரைன் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் நிராகரித்திருக்கிறார்.
உக்ரைனில் தரை, மற்றும் ஆகாய மார்க்கமாக எந்த வழிகளிலும் தலையிடுவதில்லை என்ற நேட்டோவின் முடிவில் மாற்றம் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
நேட்டோவின் அத்தகைய தலையீடு உக்ரைன் போரை ஐரோப்பா முழுவதுக்குமான யுத்தமாக மாற்றிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் ஆலை அமைந்துள்ள Zaporizhzhia பகுதிக்கு சண்டையை விஸ்தரித்தமைக்காக ரஷ்யாவுக்கு நேட்டோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அணு ஆலைப் பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ள போதிலும் அங்குள்ள ஆறு அணு உலை களும் பாதுகாப்பாக உள்ளன என்பதை சர்வதேச அணு எரிசக்தி முகவரகம் (International Atomic Energy Agency – IAEA) உறுதிப்படுத்தியிருக்கிறது.
Discussion about this post