இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தபட வேண்டும். இது விடயத்தில் இந்தியாவின் கரிசனை தொடரும்.
இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று (28) ஆரம்பமான ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பல தரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முற்போக்கு கூட்டமைப்பினர் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினர் ஆகியோருடன் தனித்தனியே கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இதன்போது அரசியல், பொருளாதார மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பொதுவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அரசியல் தீர்வு பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அவ்வேளையிலேயே அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் கரிசனை தொடரும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது, ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமானதொரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் அழுத்தங்கள் தொடர வேண்டும் என கூட்டமைப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சாதகமான பிரதிபலிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பின்போதும் அரசியல் தீர்வு சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.
Discussion about this post