மத்திய கிழக்கில் மோதல்கள் உருவாகுமானால் இலங்கையில் டொலர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் இலங்கைக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மத்திய கிழக்கில் மோதல்கள் தொடருமானால் வெளிநாட்டு பணியாளர்கள் பலர் நாடு திரும்பும் பட்சத்தில் இலங்கையில் கடும் டொலர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் முரண்பாடுகள்
மேலும், மத்திய கிழக்கில் முரண்பாடுகள் ஏற்பட்டால் அனைத்து இலங்கையர்களையும் அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 05 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குவதற்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலில் 12,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களும், ஜோர்தானில் 15,000க்கும் அதிகமானவர்களும், லெபனானில் 7,500 பேரும், எகிப்தில் 500 பேரும் பணிபுரிகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்கள்
இவர்களை கடல், தரை வழிகளில் விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், அவசர முடிவுகளை எடுத்து எல்லைகளை கடக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக பணியாற்றுமாறும் அமைச்சர் கூறியுள்ளார்.
Discussion about this post