கொடிகாமம், மிருசுவிலில் வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயதுச் சிறுமி திடீரெனக் காணாமல் போயிருந்த நிலையில் அங்கு நேற்றுப் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு அந்த இடம் சல்லடையிட்டுத் தேடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காணாமல் போயிருந்த சிறுமி பல மணி நேரத் தேடுதலின் பின்னர், வீட்டிலிருந்து 6 கிலோமீற்றர தூரத்தில் உள்ள மாசேரிப் பகுதியில் கோயில் ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டார்.
சிறுமி அந்த இடத்துக்கு எவ்வாறு சென்றார் என்பது மர்மமாகவே இருக்கின்றது. மீட்கப்பட்ட சிறுமி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கிராமவாசிகளால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். 3 வயதுச் சிறுமி 6 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றார் என்பது நம்பக்கூடியதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
சிறுமி நடந்து சென்றமைக்கான காலடித் தடங்கள் காணப்படுகின்றன என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதேநேரம் செல்லும் வழியில் நீர்ப்பரப்பு ஒன்று உள்ளது என்றும் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டில் 9 வயதுச் சிறுமி ஆயிஷா மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி ஆகிகியோருக்கு நடந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
Discussion about this post