யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் பெண் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நேற்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் இன்று (08) பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த மாதம் முதலாம் திகதி உதயநகரைச் ஜசிந்தா என்ற 42 வயதுப் பெண் காணாமல் போயிருந்தார். இது தொடர்பாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் மணியந்தோட்டத்தில் உள்ள வீடொன்று பொலிஸாரின் சந்தேக வளையத்துக்குள் வந்தது. அந்த வீட்டில் கணவனும், மனைவியும் வசித்து வந்தனர். ஜசிந்தாவிடம் இவர்கள் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், ஜசிந்தா அந்த வீட்டுக்குச் சென்றுமை தெரியவந்தது. இதற்கிடையில், பொலிஸாருக்கு நம்பகமான தகவல் ஒன்றும் கிடைத்திருந்தது. அதையடுத்து ஜசிந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் அந்த வீட்டில் இருந்தவர்கள் ஒருவரைக் கூலிக்குப் பிடித்துத் தங்கள் காணியில் கிடங்கு வெட்டியுள்ளனர். அந்தக் கிடங்கு வெட்டியமைக்கான கூலி இன்னமும் தரப்படவில்லை என்று, கிடங்கு வெட்டியவர் பொலிஸாருக்குக் கூறியுள்ளார். அந்தக் கிடங்கு குப்பைகள் போடுவதற்காக வெட்டப்பட்டது என்று வீட்டிலிருந்த கணவனும், மனைவியும் தெரிவித்தனர்.
நேற்று வீட்டையும், வளாகத்தையும் சோதனையிட்ட பொலிஸார், இரு இடங்களில் கிடங்குகள் வெட்டப்பட்டிருந்தமைக்கான தடயங்களைக் கண்டறிந்தனர். அதையடுத்துப் பொலிஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் ஜசிந்தா அடித்துக் கொலை செய்யப்பட்டு அந்த வீட்டு வளவில் புதைக்கப்பட்டார் என்ற தீர்மானத்துக்கு நேற்றிரவு பொலிஸார் வந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த வீட்டில் இருந்த கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் இன்னொருவரும் கைது செய்யப்பட்டார். இவர் 18 வயதுக்குக் குறைந்தவர் என்று கூறப்படுகின்றது. ஆயினும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.
இன்று காலையில் நீதிமன்ற அனுமதியுடன் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நீண்ட நேர அகழ்வின் பின்னர், சுமார் 6 அடிக்கும் ஆழமான குழியில் இருந்து பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. உடல் அழுகிப் பழுதடைந்து துர்நாற்றம் வீசும் நிலையில் காணப்பட்டது.
மற்றொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில், புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிள் வெளியே எடுக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.
ஜசிந்தாவிடம் இந்தத் தம்பதி 3 தொடக்கம் 5 லட்சம் ரூபா வரையில் வட்டிக்குப் பணம் பெற்றிருக்கிறார்கள். ஆயினும் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். ஜசிந்தா பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், அவரைக் கொன்று விடுவது என்று அந்தத் தம்பதி முடிவெடுத்துள்ளது. அதற்காக உறவினரான ஒருவரையும் கூட்டுச் சேர்த்ததுடன், கொலை செய்தால் குறிப்பிட்ட தொகை பணம் தருவதாகவும் பேரம் பேசியுள்ளது.
சம்பவ தினத்தன்று ஜசிந்தா பணம் கேட்டு அந்த வீட்டுக்கு வந்தபோது அவரை உள்ளே அழைத்துள்ளனர். உள்ளே வந்த ஜசிந்தாவின் தலையில் முதலில் பலகையால் அடித்தும், பின்னர் கம்பியால் அடித்தும் கொலை செய்தனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்திருக்கின்றது. அதன்பின்னர் வீட்டு வளவில் கிடங்கு வெட்டி உடலைப் புதைத்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் நடந்தபின்னர், சிறிது நாள் கழித்து ஜசிந்தாவின் வீட்டுக்கு இந்தத் தம்பதி சென்றது என்றும், ஜசிந்தாவிடம் கடன்வாங்கினோம் என்று தெரிவித்து இரண்டு லட்சம் ரூபாவைத் திருப்பிக் கொடுத்தது என்ற தகவலையும் அறிய முடிந்தது. அந்தப் பணம் கொலை செய்யப்பட்டபோது, ஜசிந்தாவிடம் இருந்தது என்றும், தங்கள் மேல் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்தத் தம்பதி பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
தற்போது இந்தக் கொலையைத் தாம் மட்டுமே செய்தனர் என்று கணவனும், மனைவியும் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது நபர் போதைப் பாவனைக்கு அடிமையானர் என்று கூறப்படுகின்றது. அவர் சில இடங்களில் போதையில் கூறிய தகவல்களே இந்தக் கொலைச் சம்பவம் வெளிப்படக் காரணம் என்று கூறப்படுகின்றது.
சில லட்சம் ரூபா பணத்துக்காக பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, வீட்டு வளவிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post