புலிகள் அமைப்பிற்கு பலவந்தமாக ஆட்களை சேர்த்தார் என குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் போராளியும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை பேராசியருமான கண்ணதாசன் குறித்த வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்ப ட்டார்.
தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின்
நிறைவில் படையினரிடம் சரணடைந்து மறுவாழ்வு அளிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்டிருந்தார்.
புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்களில் ஒருவரான கண்ணதாசன், அதன்பின்னர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி
வந்தார்.
இதன்போது கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரியில், கிளிநொச்சி- உருத்திரபுரம்,
மாதவாக்கில், மஞ்சுளா விஜயபாலன் எனும் சிறுமியைக் கட்டாயமாக விடுதலைப்
புலிகள் அமைப்பில் சேர்த்ததாக அவருடைய தாயார், கண்ணதாசன் மீது கடந்த 2014
மார்ச்சில் வழக்கு பதிவு செய்தார்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய அதே ஆண்டு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கண்ணதாசன், பல மாதங்களாக தடுப்பு காவலில்
வைக்கப்பட்டிருந்தார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பலவந்தமாக ஆள்களைக்
கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்
சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல்
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு
அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை
வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக க.கண்ணதாசன் சார்பில்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில்
மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மேன்முறையீட்டு மனு மீது 2ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்த
நிலையில், 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த
மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு
எடுக்க அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு
எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன்
முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி,
குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்தார்.
மேலும் கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
இதன்போது வழக்குத் தொடுனர் தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா மேல்
நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், எதிரியை விடுவித்து விடுதலை செய்து
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Discussion about this post