இலங்கைக்கு வரும் தமது நாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பயண ஆலோசனையை பிரிட்டன் தளர்த்தியுள்ளது. பிரிட்டனின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, அந்நிய செலாவணி நெருடிக்கடி காரணமாக, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையின் பொருளாதார நிலைமை சவாலாக உள்ளது.
கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் நீண்ட வரிசைகள் இருக்கக்கூடும்.
வாடகை வாகனங்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்தைப் பெறுவதில் சிரமங்கள் அல்லது தாமதங்கள் இருக்கலாம். அத்துடன் நாளாந்த மின் துண்டிப்பு ஏற்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியிலிருந்து போராட்டங்கள் இடம்பெற்று பல வன்முறைச் சம்பங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் போராட்டங்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
இதனால் இலங்கை அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட உள்ளூர் கட்டுப்பாடுகளை குறுகிய அறிவிப்பில் விதிக்கலாம்.
எனவே, இலங்கையில் உள்ள பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் இருப்பதுடன், எந்தவொரு ஆர்ப்பாட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களைத் தவிர்த்து உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் என்றுள்ளது.
Discussion about this post