மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, காலிமுகத்திடல் தாக்குதல் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி. நேற்று மாலை கோட்டை நீதிவான் திலின கமகேவின் இல்லத்துக்குச் சென்று சரணடைந்தார்.
அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிவான், வௌிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் வாக்குமூலம் அளிக்க வர வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நேற்றிரவு 8 மணிக்கு முன்னதாக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுப் பகல் உத்தரவிட்டிருந்தது.
அவரைக் கைதுசெய்வதற்காக கோட்டை நீதிவான் பிறப்பித்த பிடியாணையை அவர் சரணடையும் வரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் ,குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேவேளை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அவருக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் எனக் கோட்டை நீதிவானுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Discussion about this post