வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் தலைநகர் கார்ட்டூம் பகுதியில் அந்நாட்டின் இராணுவத்தினருக்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே மோதல் வெடித்து இருக்கிறது.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் நடந்த மோதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 183 பேர் காயமடைந்தனர் என்று சூடான் மருத்துவர்கள் சங்கம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள்தானா என்பது தொடர்பிலும் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
குறிப்பாக தெற்கு கார்ட்டூம் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் அதிக அளவிலான தூப்பாக்கிச்சூடு சத்தங்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதேபோல் சூடானில் அமைந்து இருக்கும் அந்நாட்டின் இராணுவ தலைமையகம் மற்றும் மத்திய கார்ட்டூம் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு அமைச்சகம் அருகேயும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது,
சூடான் நாட்டின் சக்தி வாய்ந்த துணை இராணுவப் படையாக ஆர்.எஸ்.எப் உள்ளது. இதன் செயல்பாடுகள் கடந்த சில நாட்களாக தன்னிச்சையாக உள்ளது எனவும், அந்நாட்டு அரசாங்கம் மற்றும் இராணுவத்துக்கு கட்டுப்படாமல் துணை இராணுவ படைசெயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகைய செயல்பாடுகள் சட்டத்துக்கு புறம்பானவை என்று சூடான் நாட்டு இராணுவம் துணை இராணுவ படையை கண்டித்தது.
இதன் காரணமாக சூடான் நாட்டின் இராணுவத்திற்கும் ஆர்.எஸ்.எப் துணை இராணுவ படைக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு எதிர் தாக்குதல் நடத்தும் அளவுக்கு மோதல் பெரிதானது.
குறிப்பாக கடந்த 13 ஆம் திகதி இந்த மோதல் பூதாகரமாக வெடிக்கவே இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர்.
தலைநகர் கார்ட்டூம், அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆர்.எஸ்.எப் துணை இராணுவப் படைக்கு ஆதரவாக மேலும் சில படைகளும் இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கி உள்ளதால் மோதல் மேலும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.
நாட்டை காக்க வேண்டிய இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு மத்தியிலேயே மோதல் ஏற்பட்டுள்ளதால் சூடானில் பதற்றம் அதிகரித்து காணப்படுகின்றது,
Discussion about this post