எவ்வளவு காலம் எடுக்கும் என்று சொல்லமுடியாவிட்டாலும் இந்தப் போரில் உக்ரைன் மக்களே வெற்றி பெறுவர் – என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் பிளிங்கென் கூறியிருக்கிறார்.
பிரெசெல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளோடு நடந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் பிபிசியின் ராஜீகத் துறைச் செய்தியாளருக்கு அளித்த பேட்டியிலேயே இதனைக் கூறினார்.
உக்ரைன் போரை விட மிகத் தீவிரமான கவனத்தைப் பெறுவது அது இன்னும் மோசமாகி அதைத் தாண்டி வெளியே செல்லுமா என்பதுதான். நாங்கள் அக்கறை கொண்ட – கவலைப்படுகின்ற விடயம் அது.
உக்ரைன் மக்களுக்கான குடி தண்ணீரை மின்சாரத்தை, வெப்பத்தைத் தடுக்கும் விதமாக அதன் உட்கட்டமைப்பைச் சிதைக்கின்ற உத்திகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. ரஷ்யப் படைகள் அங்கு மக்களுக்கு எதிராக மிருகத்தனமான வழிமுறைகளைப் பின்பற்றுவதால் பேரவலமான நிலை தோன்றியுள்ளது.
சர்வதேச சமூகம் உக்ரைனுக்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய உறுதி பூண்டுள்ளது. புடின் தொடங்கிய இந்தப் போரை முடித்துவைக்க அது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கேள்வி :உக்ரைனியர்கள் வெல்ல முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
பிளிங்கென் : ஆம். காலப்போக்கில். நிச்சயமாக வெல்வார்கள். இது எவ்வளவு காலம் நீடிக்கும், எவ்வளவு காலம் எடுக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் தங்கள் சுதந்திரத்துக்காகவும் எதிர்காலத்துக்காகவும் போராடுகின்ற 45 மில்லியன் உக்ரைன் மக்களையும் ரஷ்யா தன் விருப்பத்துக்கு அடிபணிய வைக்கலாம் என்று எண்ணி அவர்களை தனது விரல் நுனியில் வைத்திருக்க நினைப்பது பல செய்திகளைச் சொல்லும்.
கேள்வி : இந்தப் படையெடுப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மொஸ்கோவின் தலைமையை மாற்றுவதற்கு அமெரிக்கா முயல்கிறதா?
பிளிங்கென் : நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை. எது நடந்தாலும் அதனை ரஷ்ய மக்கள் தான் தீர்மானிக்க முடியும்.
இதேவேளை – உக்ரைன் மீது வான் பறப்புத் தடை வலயம் ஒன்றை அறிவிப்பதற்கு நேட்டோ மறுப்புத் தெரிவித்திருப்பதை உக்ரைன் அதிபர் கண்டித்திருக்கிறார்.
“உக்ரைனின் வீழ்ச்சி என்பது ஐரோப்பாவின் வீழ்ச்சியின் ஆரம்பம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
Discussion about this post