டென்மார்க் அங்கு வரும் உக்ரைன் அகதிகளை ஏனைய நாடுகளது அகதிகளைக் கையாள்வது போலன்றி விசேட சலுகைகள் வழங்கிக் கவனிக்கவுள்ளது.
உக்ரைன் நாட்டவர்களுக்காக அதன் குடியேற்றவாசிகள் தொடர்பான இறுக்கமான கொள்கைகளைக் கைவிட்டு மிக விரைவிலேயே விசேட சட்டம் ஒன்றை அமுலுக்குக் கொண்டுவரவுள்ளது. அச்சட்டம் அங்கு தங்கியுள்ள ஏனைய வெளிநாட்டு அகதிகளுக்குப் பொருந்தாது.
உக்ரைனியர்கள் மிக குறுகிய காலத்தில் இரண்டாண்டுகால வதிவிட அனுமதியையும் உடனடியாகத் தொழில்வாய்ப்பையும் பெற்றுக் கொண்டு டெனிஷ் சமூகத்துடன் இணைந்துகொள்ளப் புதிய சட்டம் வாய்ப்பளிக்கவுள்ளது. சமூக நல உதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கவுள்ளன.
விரைவாக வதிவிட அனுமதியைப் பெற்றுக்கொண்டு நாட்டின் தொழில் சந்தையில் இணைவதோடு அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதை துரிதப்படுத்தவும் விரும்புகின்றோம் என்று டென்மார்கின் வெளிவிவகாரம் மற்றும் குடியேற்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைனில் இருந்துவரும் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் இந்த விசேட சட்டத்தின் கீழ் கையாளப்படமாட்டார்கள் என்பதையும் டெனிஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக உக்ரைனில் கல்வி கற்கும் அல்லது தொழில் புரியும் இந்தியர்கள், இலங்கையர்கள் அல்லது ஆபிரிக்கர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படமாட்டார்கள்.
தற்சமயம் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் உக்ரைனியர்கள் டென்மார்க்கில் 90 நாள்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் சென்றுவரவும் தங்கியிருக்கவும் முடியும். ஆனால் வதிவிட உரிமை கோரிவிட முடியாது.
Discussion about this post