65 பேர் கொண்ட எதிர்க்கட்சி அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு செலவு-திட்டத்திலேயே அரசாங்கம் தோற்கடிக்கப்படலாம்.
அதனால் எதிர்க்கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும். தற்போதுள்ள அரசாங்கம் தொடர்பாக சர்வதேசத்துக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அதனால் மக்கள் ஆணையை வெளிப்படுத்த இடமளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வெளியே இருந்து மக்கள் தெரிவிக்கும் விடயங்கள் இந்த நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கின்றனவா என்பது தொடர்பாக நாங்கள் அனைவரும் மனசாட்சியை தொட்டு கேட்கவேண்டும்.
மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம்தான் தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சியின் தீர்வு என்ன என கேட்கமுடியாது?.
உலகில் எந்த நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சியிடம் தீர்வு கேட்பதில்லை. அதேபோன்று எங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று ஆளும் தரப்பினர் கோரி வருகின்றனர்.
எமக்கு அரசாங்கம் அமைக்க முடியாது. எங்களுக்கு 65 பேரே இருக்கின்றனர். அவ்வாறு நாங்கள் அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு-செலவு திட்டத்திலேயே எமது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும்.
ஆட்சி அமைக்க மக்கள் ஆணை கிடைத்தால் அதைச் செய்ய வேண்டும். முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலகவேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சியிடம் அரசாங்கம் அமைக்க வேண்டும என்று தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல.
ஆங்கில பத்திரிகை ஒன்று மேற்கொண்ட கருத்து கணிப்பில் 96 வீதமானவர்கள் கோத்தாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் என தெரிவித்துள்ளனர். வீதியில் போராடும் மக்களும் அதையே கூறுகின்றனர்.
இளைஞர்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும். அதனால் நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்திருக்கின்றோம்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் நாங்கள் நாடாளுமன்றத்துக்கு வருவது தொடர்பாக தீர்மானம் எடுக்கவேண்டி வரும்.
எமது நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கப்ப்டாவிட்டால் சபாநாயகரான உங்களது வீட்டை மக்கள் முற்றுகையிடுவார்கள். அதனால் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post