இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி நேற்று வியாழக்கிழமை 18 பேர் தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்துக்குச் தஞ்சம் கோரிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம், நீர்வேலியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை ஊடாக படகு மூலம் இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள சேராங்கோட்டை எனும் பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.
அதேவேளை, மன்னாரைச் சேர்ந்த 4 மாதக் கர்ப்பிணிப் பெண் உட்பட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல்முனையையைச் சென்றடைந்துள்ளனர். தஞ்சம் கோரிச் சென்ற 18 பேரிடமும் விசாரணை நடத்திய தமிழகப் பொலிஸார், அவர்களை மண்டபம் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை 60 பேர் இலங்கையில் இருந்து தமிழகத்துக்குச் தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர்.
Discussion about this post