இன்று ஹர்த்தால் நாடு முடங்கும்!- 2000 தொழிற்சங்கங்கள் இணைவு!!
இன்று முன்னெடுக்கப்படவுள்ள 24 மணிநேர ஹர்த்தாலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் நாடு இன்று முற்றாக ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ், அரசாங்க, அரை அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆடைத் தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த ஹர்த்தாலில் பங்கெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
அதேவேளை, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என ரயில் தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.
சகல ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை பாடசாலை நாள் என்றாலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வரவு இருக்காது என்பதால், மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பலாமா இல்லையா? என்பதைப் பெற்றோர் – பாதுகாவலர் தீர்மானிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யப் பணித்துள்ளன. பல நகரங்களில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமான வர்த்தகர்கள் கடைகளை மூடி போராட்டத்துக்கு ஆதரவளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார பணியாளர்களது சங்கமும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்ற போதும், மருத்துவமனைகளில் பணிகள் முன்னெடுக்கப்படும்.
தபால் ஊழியர்கள், கிராம சேவகர்கள், வங்கி சேவையாளர்கள் போன்ற துறையினரின் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளித்தாலும், அவசர சிகிச்சை நடவடிக்கைகள் இடம்பெறும். நண்பகலில் அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டின் அனைத்துத் துறைகளும் ஸ்தம்பிக்கும் என்றும், அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கும் வரையில் போராட்டங்கள் தொடரும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Discussion about this post